எங்களிடமிருந்து தரமான தமிழ் இசைக் கல்வியைப் பெறுங்கள்

எங்களைப் பற்றி

நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றிய சிறு அறிமுகம்

“தேமதுரத் தமிழோசை உலகெமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியார் பாடல் வரிகளின்படி நாம் தேன் போன்ற சுவைமிகுந்த தமிழ் மொழியின் உயர்வினை உலகமெல்லாம் அறிந்திடச் செய்வது சிறப்பாகும். செவ்வியல் மொழியாகத் திகழும் தொன்மையான தமிழ் மொழி, பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் இலக்கியத்தில் பல்வேறு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இயல், இசை, நாடகம் என முத்தமிழாகப் போற்றப்படும் தமிழ் மொழியில் இசைத் தமிழுக்கு என உலக அளவில் தனி பல்கலைக்கழகம் இல்லை. தமிழின் மிகச்சிறந்த இசை குறித்த இலக்கிய வரலாற்றையும், வளமையையும், பண்பாட்டு மரபினையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமையாகும். இசையில் விருப்பம் கொண்டவர்கள் இசைத்தமிழின் கூறுகளை அறிந்து அதில் புலமை பெற்று தமிழ் மரபிசையைக் காப்பாற்ற வேண்டும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் உலகத் தமிழிசைப் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் வெர்ஜீனியா மாகாணத்தில் நிறுவப்பட்டு உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் இசைத்தமிழுக்கு இளங்கலை முதுகலை பட்டப் படிப்புகளில் உயர் கல்வியை வழங்குவதோடு இசை குறித்த ஆய்விற்கான படிப்பினையும் வழங்குகின்றது. இக்கல்வி கலைத்துறையில் பணியாற்றுவதற்கு அடிப்படை அறிவாக அமையும். இசைத் தமிழ் சார்ந்த சான்றிதழ் படிப்புகள், பட்டயப் படிப்புகள், இளங்கலை முதுகலைப் பட்டப் படிப்புகள் அனைத்தும் இணையவழிக் கல்வியாக வழங்குவதை இப்பல்கலைக்கழகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான பாடத்திட்டங்கள் எமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, (உலகளாவிய நேரம் மாறுபடுவதால்) மாணவர்கள் தங்களின் தேவைக்கேற்ப பாடங்களை பல்கலைக்கழக இணைய தளத்தின் காணொளி வாயிலாகக் கேட்டு அறிந்து கொள்ளலாம். இது ஆசிரியர்கள் இணையவழியில் நடத்தும் வகுப்புகளுடன் மட்டுமல்லாது மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது. பாடங்கள் பல்கலைக்கழகத்தின் மின் இணைப்பில் பதிவேற்றம் செய்து எப்பொழுதும் கிடைக்கும் வண்ணம் வைக்கப்பட்டிருக்கும். இசைத்தமிழில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற ஆசிரியர்களை எமது பல்கலைக்கழகம் தேர்வு செய்து ஏற்படுத்திவருகிறது. ஆசிரியர்கள் காணொளிகளைப் பயன்படுத்தி பாடங்களை இணையத்தின் வழி கற்றுக் கொடுக்கும் முறையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இசைத்தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவத்தின் பாதையில் மிகவும் நேர்மையான முறையில் நெறிமுறைப்படுத்தப்பட்டு தனித்தமிழ் செயலாக்க நிறுவனமாகச் செயல்படும் என்பது திண்ணம்.​

தலைமை

திருமிகு பாபு விநாயகம்

நிறுவனர் & தலைவர்

முனைவர் மார்கிரெட் பாஸ்டின்

மேலாண்மை & நிர்வாகத் துணைத் தலைவர்

முனைவர் ஷைலா ஹெலின்

கல்விப் புலத்தலைவர்

திருமிகு அனுஷா பத்மநாபன்

இயக்குனர் செயல்பாடு

திருமிகு அஷ்வின் பாபு விநாயகம்

ஊடகம் & தொழில்நுட்ப மேலாளர்

பாடல் வரிகளுடன் தமிழ்த்தாய் வாழ்த்து