தமிழ்த்துறையின் ஒரு பிரிவான இசைத்தமிழ்ப் பாடநெறியானது தமிழ் மற்றும் இசைத்தமிழின் இலக்கிய இலக்கணங்களை அதன் மரபு நிலையிலும் நவீன பார்வையிலும் கற்பிப்பதும் செயல்முறைப்படுத்துவதும் இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழிசையானது செயல்முறையிலும் ஆராய்ச்சி பின்னணியிலும் சமய, சமூக பின்னணியிலும் கற்பிக்கப்படும். ஆய்வு முறையிலும் ஒப்பீட்டு முறையிலும் தமிழிசைப்பின்னணியிலும் திறனாய்வு மற்றும் நவீன தொழில் நுட்பம் போன்ற புதிய நெறிகளிலும் அணுகும் முறைகளுக்கு அடித்தளம் இடப்படும். இதன்மூலம் செழுமையான ஒர் இசைத்தமிழ்ப் பாடநெறியினை வளர்ப்பதே இப்பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும். தமிழிசை ஆய்வில் உருவாகும் புதிய சிந்தனைப் போக்குகளையும் வளர்ச்சிகளையும் புதிய ஆய்வு முறைகளையும் சமகால சிந்தனைகளின் பின்னணியில் புரிந்து கொண்டு அதற்கேற்ற முறைகளில் பாடத்திட்ட நெறிகளை கையாளும் என்பது திண்ணம். இதன் அடிப்படையில் ஆழமான இசைத்தமிழ் ஆய்வு நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் என்பது உறுதியாகும்.
உலகில் மிகச்சிறப்போடு விளங்கும் உயர்தனிச் செம்மொழிகளுள் தமிழ்மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் முப்பகுப்பினைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றுள் இசைத்தமிழின் தொன்மையானது, பல்வேறு இசைக்கூறுகளையும் நுட்பங்களையும் தன்னகத்தே கொண்டு, தொன்று தொட்டு இன்று வரை பரிணமித்து வருகின்றது. இதன் வளர்ச்சியானது காலந்தோறும் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் நம்மிடம் காட்சியளிக்கின்ற நிலையில், அதிநுட்பக் களஞ்சியமாய்த் திகழும் இசைத்தமிழ் கூறுகளை மீட்டுருவாக்கி, அதன் உயர்நிலைதனை எல்லோருக்கும் எடுத்தியம்புவதுடன் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதே இப்பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்ற தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், தமிழிசை அறிஞர்கள், கலைஞர்கள் ஆகியவர்களை இப்பல்கலைக்கழகமாம் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதே எமது பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கமாகும். இசைத்தமிழ் சார்ந்த சான்றிதழ் படிப்புகள், பட்டயப்படிப்புகள், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் முதலான படிப்புகள் இணையத்தின் வழி சிறந்த முறையில் வழங்குவதே என்பது இப்பல்கலைக்கழகத்தின் முக்கியமான பணியாகும். என்றும் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவத் தனித்தமிழ் செயலாக்க நிறுவனமாக எம் பல்கலைக்கழகம் செயல்படும் என்பது திண்ணம்.
©2024 உலகத் தமிழிசைப் பல்கலைக்கழகம் – அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை